2. ஆகார ஈறு

குறிற்கீழ் ஆகாரமும் தனி ஆகாரமும்

227.குறியதன் முன்னரும் ஓரெழுத்து மொழிக்கும்
அறியத் தோன்றும் அகரக் கிளவி.

இஃது, அவ்வீற்றில் சிலவற்றிற்கு எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) குறியதன்முன்னரும் ஓர் எழுத்து மொழிக்கும்-குற்றெழுத்தின்முன் நின்ற ஆகாரவீற்றிற்கும் ஓரெழுத்தொருமொழி ஆகாரவீற்றிற்கும் , அகரக்கிளவி அறிய தோன்றும்-(நிலைமொழிக்கண்) அகரமாகிய எழுத்து அறியத்தோன்றும்.

எ - டு: பலாஅக்கோடு செதிள், தோல், பூ எனவும்; காஅக்குறை, செய்கை, தலை, புறம் எனவும் வரும்.

ஓரெழுத்தொருமொழி முற்கூறாவதனால், அதன்கண் அகரப் பேறு சிறுபான்மையெனக் கொள்க. `அறிய' என்றதனால் அவ்விரு வழியும் அகரம் பொருந்திய வழியே வருதலும், அவ்வீற்று வேற்றுமையுள் எடுத்தோதாதவற்றின் முடிபும். இவ்வீற்றுள் உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கண் சென்றவழி இயைபு வல்லெழுத்து வீழ்வும், இவ்வுயிரீற்றில் வரும் உருபீற்றுச் செய்கையும் கொள்க.

எ - டு: அண்ணாஅத்துக்குளம், உவாஅத்துஞான்றுகொண்டான்,உவாஅத்தாற் கொண்டான், யாவற்றுக்கோடு என இவை பிறமுடிபு. மூங்காவின்றோல் என்பது வல்லெழுத்து வீழ்வு. இடாவினுட் கொண்டான் என்பது உருபீற்றுச்செய்கை.

(24)