2. ஆகார ஈறு

சில மரப் பெயர்கள்

230.யாமரக் கிளவியும் பிடாவுந் தளாவும்
ஆமுப் பெயரும் மெல்லெழுத்து முடிமே.

இஃது, அவ்வீற்றிற் சிலவற்றிற்கு வல்லெழுத்து விலக்கி மெல்லெழுத்து விதித்தல் நுதலிற்று.

(இ-ள்) யா மரக்கிளவியும் பிடாவும் தளாவும் ஆ முப்பெயரும்-யா என்னும் மரத்தை உணரநின்ற சொல்லும் பிடா என்னுஞ் சொல்லும் தளா என்னும் சொல்லுமாகிய அம்மூன்று பெயரும், மெல்லெழுத்து மிகும்-வல்லெழுத்து மிகாது மெல்லெழுத்து மிக்குமுடியும்.

எ - டு: யாஅங்கோடு, பிடாஅங்கோடு, தளாஅங்கோடு, செதிள், தோல், பூ என வரும்.

மெல்லெழுத்துப்பெறு வருமொழித் தொழிலாதலின், வருமொழி வல்லெழுத்தை விலக்கிற்று.

(27)