இஃது, மேலனவற்றிற்கு வல்லெழுத்தும் சிறுபான்மை மிக்கு முடியும் என இறந்தது காத்தல் நுதலிற்று. (இ-ள்) வல்லெழுத்து மிகினும் மானம் இல்லை - மேற் கூறிய மூன்று பெயரும் மெல்லெழுத்தேயன்றி வல்லெழுத்து மிக்கு முடியினும் குற்றம் இல்லை. எ - டு: யாஅக்கோடு , பிடாஅக்கோடு , தளாஅக்கோடு செதிள் , தோல் , பூ என வரும் . `மான மில்லை' என்றதனால் , யா முதலிய மூன்றற்கும் உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கண் சென்றவழி , இயைபு வல்லெழுத்து வீழ்க்க. எ - டு: யாஅவின்கோடு , பிடாஅவின்கோடு , தளாஅவின் கோடு எனவரும். இன்னும் அதனானே , யாஅத்துக்கோடு எனச் சிறுபான்மை அத்துப்பேறுண்டேனும் கொள்க . அவ்வகரப்பேற்றோடு வல்லெழுத்துப்பெறுதலின் , "யாமரக்கிளவி" என்பதனைக் "குறியதன் முன்னரும்" என்பதன்பின் வையாத விதனால் , இராவிற்கொண்டான் , நிலாவிற்கொண்டான் என உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கண் சென்றவழி இயைபுவல்லெழுத்து வீழ்க்க . நிலாவிற்கொண்டான் என்பதற்கு நிலாத்துக் கொண்டான் என்பது ஈற்றுப் பொது முடிபாயினவாறு அறிக. (28)
|