இஃது, அவ்வீற்றில் சிலவற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி கூறுதல் நுதலிற்று. (இ-ள்) மாமரக்கிளவியும் ஆவும் மாவும் ஆமுப்பெயரும் அவற்று ஓர் அன்ன-மாமரமாகிய சொல்லும் ஆ என்னும் சொல்லும் மா என்னும் சொல்லுமாகிய அம் மூன்று பெயர்ச்சொல்லும் மேற்கூறிய யா முதலிய மூன்றனொடும் ஒரு தன்மையவாய வல்லெழுத்துப் பெறாது மெல்லெழுத்துப் பெற்று முடிதலுமுடைய , ஆவும் மாவும் அகரம் வல்லெழுத்து அவை அவண் நிலையா னகரம் ஒற்றும் - அவற்றுள் ஆவும் மாவும் முன்பெற்று நின்ற அகரமும் வல்லெழுத்துமாகிய அவை அவ்விடத்து நிலை பெறாவாய் னகரம் ஒற்றாகப் பெற்றுமுடியும். எ - டு: மாஅங்கோடு , செதிள் , தோல் , பூ , எனவும் ; ஆன்கோடு மான்கோடு , செவி , தலை , புறம் எனவும் வரும் . "அறிய" (உயிர்மயங்கியல் - 24) என்றதனால் , சிறுபான்மை மாங்கோடு என அகரமின்றியும் வரும் . இனி `அவண்' என்றதனால் காயாங்கோடு, ஆணாங்கோடு, நுணாங்கோடு என்றாற்போலப் பிறவும் மெல்லெழுத்துப் பெறுதலும் , அங்காக்கொண்டான் , இங்காக்கொண்டான் , உங்காக்கொண்டான் , எங்காக்கொண்டான் என இவ்வீற்று ஏழாம் வேற்றுமை இடப்பொருள் உணரநின்ற இடைச்சொற்கள் வல்லெழுத்துப் பெறுதலும் ; ஆவின்கோடு, மாவின்கோடு எனச் சிறுபான்மை இன்பெறுதலும் பெற்றவழி வல்லெழுத்து வீழவும் கொள்க .`அவற்றோரன்ன' என்ற மாட்டேற்றால் பெற்று நின்றது மெல்லெழுத் தாகலின் `அகரம் வல்லெழுத் தவையவ ணிலையா' என்று ஓதற்பாலதன்றெனின் , மேல் "ஊவென்னொரு பெயராவொடு சிவணும்" (உயிர் மயங்கியல் - 57) என்றவழி , அம்மாட் டேற்றானே அதன் வல்லெழுத்து வீழ்வும் கொளல் வேண்டித் "திரிந்த தன்றிரிபது" என்னும் நயத்தானே மெல்லெழுத்தை வல்லெழுத்தாக ஓதினானெனக் கொள்க. (29)
|