இஃது, அவ்வீற்றிற் சிலவற்றிற்குச் செய்யுள் முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்) குறியதன் இறுதிச்சினை கெட உகரம் அறிய வருதல் செய்யுளுள் உரித்து - குறியதன் இறுதிக்கண் நின்ற ஆகாரத்தினது சினையாகிய அகார மாத்திரை கெட ஆண்டு உகரம் அறியவருதல் செய்யுளிடத்து உரித்து . எ - டு: "இறவுப் புறத்தன்ன பிணர்படு தடவுமுதல்"1 என வரும் . `அறிய' என்றதனான் , உகரம்பெறாது சினைகெடுதலும் கொள்க. பிணவுநாய் முடுக்கிய என்றாற்போல வரும் அல்வழி முடிபு "கிளந்தவல்ல" (குற்றியலுகரப் புணரியல் - 77) என்னும் புறனடையதெனக் கொள்க. (32)
`1. சுறவுக் கோட்டன்ன முள்ளிலைத் தாழை' (நற் . 19) `புறவுப் புறத்தன்ன புன்காய் உகாய்' (குறுத் . 274) (நச்.)
|