3. இகர ஈறு

இகர ஈற்று வினைச்சொல்லும் இடைச்சொல்லும்

237.இனி அணி என்னுங் காலையும் இடனும்
வினை யெஞ்சு கிளவியுஞ் சுட்டும் அன்ன.

இஃது, இவ்வீற்றுள் சில இடைச்சொல்லும் வினைச்சொல்லும் முடியுமாறு கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) இனி, அணி என்னும் காலையும் இடனும் வினையெஞ்சு கிளவியும் சுட்டும் அன்ன - இனி என்றும் அணி என்றும் சொல்லப்படுகின்ற காலத்தையும் இடத்தையும் . உணர நின்ற இடைச்சொல்லும் இவ்விகரவீற்று வினையெச்சமாகிய சொல்லும் இவ்வீற்றுச் சுட்டாகிய இடைச்சொல்லும் மேற் கூறியவாறே வல்லெழுத்து மிக்கு முடியும் தன்மைய.

எ - டு: இனிக்கொண்டான் , அணிக்கொண்டான் , சென்றான் , தந்தான் , போயினான் எனவும் ; தேடிக் கொண்டான் , சென்றான் , தந்தான் , போயினான் எனவும் ; இக்கொற்றன் , சாத்தன் , தேவன் , பூதன் எனவும் வரும் .

(34)