3. இகர ஈறு

இன்றி என்னும் சொல்

238.இன்றி யென்னும் வினையெஞ் சிறுதி
நின்ற இகரம் உகரம் ஆதல்
தொன்றியல் மருங்கின் செய்யுளுள் உரித்தே.

இஃது, இவ்வீற்றுள் வினையெச்சக் குறிப்பினுள் ஒன்றற்குச் செய்யுள் முடிபு கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) இன்றி என்னும் வினையெஞ்சு இறுதி நின்ற இகரம் உகரம் ஆதல் - இன்றி என்று சொல்லப்படும் வினையெச்சத்து இறுதிக்கண் நின்ற இகரம் உகரமாய்த் திரிந்து முடிதல் பழகநடந்த கூற்றையுடைய செய்யுட்களிடத்து உரித்து.

எ - டு: "உப்பின்று புற்கை யுண்கமா கொற்கையோனே" என வரும் .

`நின்ற' என்றதனான் , முன் பெற்றுநின்ற வல்லெழுத்து வீழ்ந்த `தொன்றியன் மருங்கு' என்றதனால் , அன்றி என்பதும் செய்யுளுள் இம் முடிபிற்றாதல் கொள்க . "நாளன்று போகிப் புள்ளிடை தட்ப" என வரும் .

(35)