இஃது, இவ்வீற்றுச் சுட்டுப்பெயர் இயல்புகணத்தொடு முடியுமாறு கூறுதல் நுதலிற்று. (இ-ள்) சுட்டின் இயற்கை முன்கிளந்த அற்று - இகரவீற்றுச் சுட்டினது இயல்பு இயல்புகணம் வரும்வழியும் உயிர்க்கணம் வரும்வழியும் முன் அகரவீற்றுச் சுட்டிற்குச் சொல்லப்பட்ட தன்மைத்தாம். என்றது மென்கணம் வரும்வழி அம் மெல்லெழுத்து மிக்கும் (உயிர் மயங்கியல்- 3) இடைக்கணம் வரும்வழியும் உயிர்க்கணம் வரும் வழியும் நிலைமொழி வகரம் பெற்றும் (உயிர் மயங்கியல் - 4,5) செய்யுட்கண் வகரம் கெட்டுச் சுட்டு நீண்டு (உயிர் மயங்கியல் - 6 ) முடியும் என்றவாறு . எ - டு: இஞ்ஞானம் , இந்நூல் , இம்மணி எனவும் ; இவ்யாழ் , இவ்வட்டு எனவும் ; இவ்வடை, இவ்வாடை , இவ்வௌவியம் எனவும் ஈவயினான1 எனவும் வரும். (36)
1. ஈ - இதோ , ஈ என்பதே அண்மைச் சுட்டின் முதல் வடிவம் . இத்தகைய முதல் வடிவங்கள் சில , செய்யுளில் அருமையாய்ப் போற்றப்பட்டுள (பாவாணர்).
|