நூன்மரபு

5. மயக்கம்

24.அவற்றுள்
லளஃகான் முன்னர் யவவுந் தோன்றும்.

இதுவும் அது.

அவற்றுள் - மேற்கூறிய நான்கனுள்ளும் , லளஃகான் முன்னர் - லகார ளகாரங்களின் முன்னர் , யவவும் தோன்றும் க ச பக்களேயன்றி யகர வகரங்களும் தோன்றி மயங்கும்.

எ - டு: 1கொல்யானை , வெள்யானை , கோல்வளை , வெள்வளை என வரும்.

(24)

1. இவற்றுட் கொல்யானை என வினைத்தொகையும் வெள்யானை எனப் பண்புத்தொகையும் நிலைமொழி வருமொழி செய்வதற்கு இயையாமையின், ` மருவின் பாத்திய ' என்று கூறுவராதலின், இவ்வாசிரியர் இவற்றை ஒரு மொழியாகக் கொள்வரென்று உணர்க. இக் கருத்தானே மேலும் வினைத்தொகையும் பண்புத் தொகையும் ஒரு மொழியாகக் கொண்டு உதாரணம் காட்டுதும், அன்றி இவ்வாசிரியர் நூல் செய்கின்ற காலத்து வினைத்தொகைக் கண்ணும் பண்புத்தொகைக்கண்ணும் அன்றி ஒரு மொழிக்கண்ணே மயங்குவனவும் உளவாதலின், அவற்றைக் கண்டு இலக்கணம் கூறினார். அவை பின்னர் இறந்தனவென்று ஒழித்து உதாரண மில்லனவற்றிற்கு உதாரணங் காட்டாமற் போதலே நன்றென்று கூறலும் ஒன்று. (நச்.)