3. இகர ஈறு

`தூணி' முன் `பதக்கு'

240.பதக்குமுன் வரினே தூணிக் கிளவி
முதற்கிளந் தெடுத்த வேற்றுமை யியற்றே.

இஃது, இவ்வீற்று அல்வழிகளில் அளவுப்பெயருள் ஒன்றற்கு மேல் தொகை மரபினுள் (சூத் - 22) எய்திய ஏ என்சாரியை விலக்கி வேறு முடிபு கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) பதக்கு முன் வரின் தூணிக்கிளவி முதல் கிளந்து எடுத்த வேற்றுமை இயற்று - பதக்கு என்னும் சொல் தன்முன்வரின் தூணி என்னும் சொல்லளவு முன்பு விதந்தெடுத்த வேற்றுமைமுடிபின் இயல்பிற்றாய் வல்லெழுத்து மிக்கு முடியும் .

எ - டு: தூணிப்பதக்கு என வரும் .

வருமொழி முற்கூறியவதனால் , இருதூணிப்பதக்கு என அடையடுத்து வந்த வழியும் இவ்விதி கொள்க . `கிளந்தெடுத்த' என்றதனால் , தூணிமுன்னர்ப் பிறபொருட்பெயர் வந்தவழியும் ஆண்டு நிலைமொழியடையடுத்து வந்தவழியும் தன் முன்னர்த்தான் வந்தவழியும் இம் முடிபு கொள்க . இன்னும் அதனானே தன்முன்னர்த் தான் வந்தவழி இக்குசாரியைப்பேறும் கொள்க.

எ - டு: தூணிக்கொள் , தூணிச்சாமை எனவும் ; இரு தூணிக்கொள் எனவும் ; தூணித்தூணி எனவும் ; தூணிக்குத்தூணி1 எனவும் வரும்.

(37)

1. இன்னும் அதனானே தன் முன்வந்த தான் வந்துழியும் அது தான் அடையடுத்து வந்துழியும் இக்குச் சாரியை பெறுதலும் கொள்க . தூணிக்குத்தூணி, இருதூணிக்குத் தூணி என வரும் . இவற்றுட் பண்புத் தொகையும் உள . (நச் .)