இதுவும் அது. (இ-ள்) உரி வரு காலை நாழிக்கிளவி இறுதி இகரம் மெய்யொடும் கெடும் - உரி என்னும் சொல் வருமொழியாய் வந்த காலத்து நாழி என்னும் சொல் தன் ஈற்றில் நின்ற இகரம் தான் ஊர்ந்துநின்ற மெய்யோடும் கெடும், அ வயின் டகாரம் ஒற்றும் - அவ்விடத்து டகரம் ஒற்றாய் வரும் . எ - டு: நாடுரி என வரும் . வருமொழி முற்கூறியவதனான் , நிலைமொழி அடையடுத்து இருநாடுரி என்ற வழியும் இம்முடிபு கொள்க . `இகரம் என்னாது இறுதி இகரம்' என்றதனால் ஈண்டை நிலைமொழியும் வருமொழியும் நிலைமொழிகளாய் நின்று பிறபொருட் பெயரோடு வல்லெழுத்து மிக்கு முடிதலும் கொள்க . நாழிக் காயம் , உரிக்காயம் என வரும். (38)
|