3. இகர ஈறு

'பனி' என்னும் காலச்சொல்

242.பனியென வரூஉங் கால வேற்றுமைக்
கத்தும் இன்னும் சாரியை ஆகும்.

இஃது, இவ்வீற்று வேற்றுமையுள் ஒன்றற்கு வல்லெழுத்தினொடு சாரியை பெறுமென எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) பனி என வரும் காலவேற்றுமைக்கு அத்தும் இன்னும் சாரியை ஆகும் - பனி என்று சொல்ல வருகின்ற பனிக்காலத்தை உணர நின்ற வேற்றுமை முடிபுடைய பெயர்க்கு வரும் சாரியை அத்தும் இன்னும் ஆகும் .

எ - டு: பனியத்துக்கொண்டான் , பனியிற் கொண்டான் ; சென்றான் , தந்தான் , போயினான் என வரும் .

`வேற்றுமை' என்றதனான் இன்பெற்றவழி இயைபு வல்லெழுத்தை வீழ்க்க.

(39)