3. இகர ஈறு

`வளி' என்னும் பூதச்சொல்

243.வளியென வரூஉம் பூதக் கிளவியும்
அவ்வியல் நிலையல் செவ்விதென்ப.

இதுவும் அது.

(இ-ள்) வளி என வரும் பூதக்கிளவியும் அ இயல் நிலையல் செவ்விது என்ப - வளி என்று சொல்ல வருகின்ற இடக்கரல்லாத1 ஐம்பெரும் பூதங்களில் ஒன்றை உணர நின்ற சொல்லும் மேற்கூறிய அத்தும் இன்னும் பெறும் அவ்வியல்பின்கண் நிற்றல் செவ்விதென்று சொல்லுவர் புலவர்.

எ - டு : வளியத்துக் கொண்டான் , வளியிற் கொண்டான் ; சென்றான் , தந்தான் , போயினான் என வரும் .

'செவ்விது' என்றதனால் , இன்பெற்றுழி இயைபு வல்லெழுத்து வீழ்க்க.

(40)

1. இடக்கர் என்றது மலவாய்க் காற்றை . [பாவாணர்]