3. இகர ஈறு

அதற்கு மேலும் ஒரு முடிபு

247.வல்லெழுத்து மிகினும் மானம் இல்லை
ஒல்வழி யறிதல் வழக்கத் தான.

இஃது, மேலதற்கு வல்லெழுத்து மிகுமென எய்தியதன் மேற் சிறப்பு விதி கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) வல்லெழுத்து மிகினும் மானம் இல்லை - ஏனைப் புளிப்பெயர் முன் எய்திய மெல்லெழுத்தேயன்றி வல்லெழுத்து மிக்கு முடியினும் குற்றம் இல்லை, ஒல்வழி அறிதல் வழக்கத்தான , பொருந்தும் இடமறிக வழக்கிடத்து.

எ - டு : புளிக்கூழ் , சோறு , பாளிதம் என வரும்.

`ஒல்வழியறிதல்' என்றதனால் , புளிச்சோறு என்றது போல மற்றையவை வழக்குப் பயிற்சி இலவென்பதும் கொள்க . `வழக்கத்தான்' என்றதனான் , இவ்வீற்றுள்1 கடுத்தோத்தும் இலேசும் இல்லாதனவற்றின் முடிபு வேற்றுமையெல்லாம் கொள்க . கூதாளங் கோடு எனவும் , கணவிரங்கோடு எனவும் , துளியத்துக்கொண்டான் எனவும் , பருத்திக்குச் சென்றான் எனவும் , கப்பிதந்தை கப்பிந்தை எனவும் கட்டி அகல் கட்டகல் எனவும் , குளிகுறுமை குளிக்குறுமை எனவும் , இன்னினிக் கொண்டான் அண்ணணிக் கொண்டான் எனவும் , புளியங்காய் எனவும் வரும் .

இன்னும் அதனானே, இவ்வீற்றுள் உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கண் சென்றவழி , இயைபு வல்லெழுத்து வீழ்தலும் கொள்க . கிளியின்கால் என வரும் .

(44)

1. எடுத்தோத்து - எடுத்துக் கூறல் .