4. ஈகார ஈறு

`நீ' `மீ' முதலிய சொற்கள்

251.நீஎன் பெயரும் இடக்கர்ப் பெயரும்
மீஎன மரீஇய இடம்வரை கிளவியும்
ஆவயின் வல்லெழுத் தியற்கை யாகும்.

இஃது , இவ்வீற்றுட் சிலவற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிது முடிபு கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) நீ என் பெயரும் இடக்கர்ப்பெயரும் மீ என மரீஇய இடம் வரை கிளவியும் - நீ என்னும் பெயரும் இடக்கர்ப்பெயராகிய (பீ என்னும் ) ஈகாரவீற்றுப்பெயரும் மீ என்று சொல்ல வரூஉம் மருவாய் வழங்கின ஓர் இடத்தினை வரைந்துணர்த்தும் சொல்லும் , ஆ வயின் வல்லெழுத்து இயற்கை ஆகும் - மேல் இவ்வீற்றுட் கூறிய வல்லெழுத்துப் பெறாது இயல்பாய் முடியும்.

எ - டு : நீ குறியை ; சிறியை , தீயை , பெரியை எனவும் ; பீ குறிது ; சிறிது , தீது, பெரிது எனவும் ; மீகண் , செவி, தலை , புறம் எனவும் வரும் .

` நீ குறியை ' என்பது மேல் `அஃறிணை விரவுப்பெய ரியல்புமா ருளவே'  ( தொல் மரபு - 13) என்றவழி அடங்காதோவெனின்மேல் வேற்றுமைக்கண் நின்கை எனத் திரிந்துமுடிதலின் அடங்காதாயிற்றென்க. மீகண் என்பது அல்வழி முடிபன்றெனினும் இயல்பாதல் நோக்கி உடன் கூறப்பட்டது.

(48)