4. ஈகார ஈறு

` நீ ' என்னும் பெயர்

254.நீஎன் ஒருபெயர் உருபியல் நிலையும்
ஆவயின் வல்லெழுத் தியற்கை யாகும்.

இஃது, அவ்வீற்று வேற்றுமை முடிபினுள் ஒன்றற்கு வேறு முடிபு கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) நீ என் ஒருபெயர் உருபுஇயல் நிலையும் - நீ என் நின்ற ஒருபெயர் உருபு புணர்ச்சிக்கண் நெடுமுதல் குறுகி னகர வொற்றுப் பெற்று முடிந்த இயல்பின்கண்ணே நின்றுமுடியும், ஆ வயின் வல்லெழுத்து இயற்கை ஆகும் - அவ்வாறு முடிந்த விடத்து இயைபு வல்லெழுத்து மிகாது.

எ - டு : நின்கை ; செவி, தலை, புறம் என வரும்.

(51)