5. உகர ஈறு

செய்யுளிற் சுட்டுப்பெயர்

259.அன்றுவரு காலை ஆவா குதலும்
ஐவரு காலை மெய்வரைந்து கெடுதலும்
செய்யுள் மருங்கின் உரித்தென மொழிப.

இஃது, இவ்வீற்றுச் சுட்டு முதற்பெயர்க்கு ஓர் செய்யுள் முடிபு நுதலிற்று.

(இ-ள்) அன்று வருகாலை ஆ ஆகுதலும் - அதிகாரத்தான் நின்ற சுட்டுமுதல் உகர வீற்றுப்பெயர் அன்று என்னும் சொல் வருமொழியாய் வருங்காலத்து அவ் வுகரம் ஆகாரமாகித் திரிந்துமுடிதலும், ஐ வருகாலை மெய் வரைந்து கெடுதலும் - ஐ என்னும் சாரியை இடைவந்து முடியுங்காலத்து அவ் வுகரம் தான் ஊர்ந்த மெய்யை ஒழித்துக் கெட்டு முடிதலும், செய்யுள் மருங்கின் உரித்து என மொழிப - அவ்விரு முடிபும் செய்யுட்கண் உரித்தென்று சொல்லுவர்.

எ - டு : அதாஅன்றம்ம , இதாஅன்றம்ம, உதாஅன்றம்ம எனவும்; அதைமற்றம்ம, இதைமற்றம்ம, உதைமற்றம்ம எனவும் வரும்.1

(56)

1. மொழிந்த பொருளோ டொன்ற அவ்வயின் முடியாததனை முட்டின்றி முடித்தல் என்பதனால், அதன்று இதன்று உதன்று என உகரங் கெட்டுத் தகரவொற்று நிற்றல் கொள்க. (நச்.)