5. உகர ஈறு

வேற்றுமையின் உகர ஈற்றுப்பெயர்

260.வேற்றுமைக் கண்ணும் அதனோ ரற்றே.

இஃது, இவ்வீற்றுப்பெயர் வேற்றுமைக்கண் முடியுமாறு கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) வேற்றுமைக்கண்ணும் அதன் ஓர் அற்று - உகர வீற்றுப்பெயர் வேற்றுமைப்பொருட் புணர்ச்சிக்கண்ணும் அவ் அகரவீற்று அல்வழியோடு ஒருதன்மைத்தாய் வல்லெழுத்து வந்தவழி வல்லெழுத்து மிக்குமுடியும்.

எ - டு : கடுக்காய்; செதிள், தோல், பூ என வரும்.

(57)