5. உகர ஈறு

`எரு' `செரு' என்னும் சொற்கள்

261.எருவுஞ் செருவும் அம்மொடு சிவணித்
திரிபிடன் உடைய தெரியுங் காலை
அம்மின் மகரஞ் செருவயின் கெடுமே
தம்மொற்று மிகூஉம் வல்லெழுத் தியற்கை.

இஃது, இவ்வீற்றுள் ஒன்றற்கு வல்லெழுத்து விலக்கிச் சாரியை விதியும் ஒன்றற்கு வல்லெழுத்தினோடு சாரியை விதியும் கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) எருவும் செருவும் அம்மொடு சிவணித் திரிபு இடன் உடைய தெரியும் காலை - எரு என்னும் சொல்லும் செரு என்னும் சொல்லும் அம்முச்சாரியையொடு பொருந்தி முன் சொன்ன வேற்றுமைப் பொதுவிதியின் வேறுபட்டு முடியும் இடனுடைய ஆராயுங்காலத்து; அம்மின் மகரம் செருவயின் கெடும் - அவ் வம்முச்சாரியையது ஈற்றின் மகரம் செரு என்னும் சொல்லிடத்துக் கெட்டு முடியும்; வல்லெழுத்து இயற்கை தம்ஒற்று மிகூஉம் - அவ்வாறு கெட்டவிடத்துச் செரு என்பது வல்லெழுத்தாகிய இயல்பையுடைய தமது ஒற்று மிக்கு முடியும்.

எ - டு : எருவங்குழி, சேறு, தாறு, பூழி எனவும்; செருவக்களம்; சேனை, தானை, பறை எனவும் வரும்.

` தெரியுங்காலை ' என்றதனால், எரு என்பதற்குப் பெரும்பான்மை மெல்லெழுத்துப்பேறும், சிறுபான்மை வல்லெழுத்துப் பேறும், செரு என்பதற்குச் சிறுபான்மை வல்லெழுத்துப்பேறும் கொள்க. எருங்குழி, எருக்குழி, செருக்களம் என வரும்.

`வல்லெழுத்தியற்கை' என்றதனான் உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கண் சென்றவழி அவ்விருமொழிக்கும் அதிகார வல்லெழுத்து வீழ்வும் கொள்க. எருவின் கடுமை, செருவின் கடுமை என வரும்.

இன்னும் அதனானே, ` அம்மொடு சிவணித் திரிபிடனுடைய' என வல்லெழுத்தின்கண்ணதாக வரைந்து கூறினமையின், அம்முச் சாரியை இயல்புகணத்துக்கண் பெறுவன கொள்க. எருவஞாற்சி, செருவஞாற்சி என வரும்.

(58)