5. உகர ஈறு

ழகர உகர ஈறு

262.ழகர உகரம் நீடிடன் உடைத்தே
உகரம் வருதல் ஆவயினான.

இஃது, இவ்வீற்றில் சிலவற்றிற்குச் செய்யுள் எய்தியதன் மேல் சிறப்பு விதி கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) ழகர உகரம் நீடு இடன் உடைத்து-இவ்வீற்று மொழிகளுள் ழகரத்தொடு கூடிய உகரவீற்றுமொழி அவ் வுகரம் ஊகாரமாய் நீண்டு முடியும் இடன் உடைத்து ; ஆவயின் உகரம் வருதல்-அவ்விடத்து உகரம் வந்து முடிக.

` இடனுடைத்து ' என்றதனான் இது செய்யுளிடத்தெனக் கொள்க.

எ - டு : "பழூஉப்பல் லன்ன பருவுகிர்ப் பாவடி" என வரும்.

(59)