6. ஊகார ஈறு

ஊகார ஈற்று வினைச்சொல்

266.வினையெஞ்சு கிளவிக்கும் முன்னிலை மொழிக்கும்
நினையும் காலை அவ்வகை வரையார்.

இஃது, இவ்வீற்று வினைச்சொற்கு முடிபு கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) வினையெஞ்சு கிளவிக்கும் முன்னிலை மொழிக்கும் - ஊகாரவீற்று வினையெச்சமாகிய சொல்லிற்கும் முன்னிலை மொழியாகிய வினைச்சொல்லிற்கும், நினையும்காலை அவ்வகை வரையார் - ஆராயுங்காலத்து அவ் வல்லெழுத்து மிக்குமுடியும் கூற்றினை நீக்கார்.

எ - டு : உண்ணூக்கொண்டான், சென்றான், தந்தான், போயினான் எனவும்: கைத்தூக்கொற்றா; சாத்தா, தேவா, பூதா எனவும் வரும்.

`நினையுங்காலை' என்றதனான், இவ்வீற்று உயர்திணைப்பெயர் அல்வழிக்கண் வல்லெழுத்து மிக்கு முடிவன கொள்க. ஆடூஉக்குறியன், மகடூஉக்குறியள் என வரும்.

(63)