6. ஊகார ஈறு

பூ என்னும் பெயர்

269.பூ என ஒருபெயர் ஆஇயல் பின்றே
ஆவயின் வல்லெழுத்து மிகுதலும் உரித்தே.

இஃது, அவற்றுள் ஒன்றக்கு உகரமும் வல்லெழுத்தும் விலக்கிப் பெரும்பான்மை மெல்லெழுத்தும் சிறுபான்மை வல்லெழுத்தும் பெறுமென எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் நுதலிற்று.

(இ-ள்) பூ என ஒரு பெயர் அ இயல்பு இன்று - பூ என்னும் ஊகாரவீற்றையுடைய ஒரு பெயர் மேற்சொன்ன உகரமும் வல்லெழுத்தும் பெற்று முடியும் அந்த இயல்பில்லாமையை உடைத்து; எனவே, வேறு ஓர் இயல்பிற்றாய் மெல்லெழுத்து மிக்குமுடியும். ஆவயின் வல்லெழுத்து மிகுதலும் உரித்து-அவ்விடத்து அம் மெல்லெழுத்தே யன்றி வல்லெழுத்து மிக்கு முடிதலும் உரித்து.

மெல்லெழுத்துப் பெறுமென்றது, உரையிற் கோடலாற் கொள்ளப்பட்டது.

எ - டு : பூங்கொடி, பூக்கொடி; செய்கை, தாமம்; பந்து என வரும்.

(66)