6. ஊகார ஈறு

`ஊ' என்னும் பெயர்

270.ஊஎன் ஒருபெயர் ஆவொடு சிவணும்,

இஃது இன்னும் அவ்வீற்றுள் ஒன்றற்கு உகரமும் வல்லெழுத்தும் விலக்கி நிலைமொழி னகரம் பெறுமென எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் நுதலிற்று.

(இ-ள்) ஊ என் ஒரு பெயர் ஆவொடு சிவணும்-ஊ என்று சொல்லப்படும் ஊகாரவீற்றையுடைய ஒரு பெயர் ஆகார வீற்றில் ஆ என்னும் சொல்லொடு பொருந்தி வல்லெழுத்துப் பெறாது நிலைமொழி னகரவொற்றுப் பெற்று முடியும்.

எ - டு : ஊன்குறை; செய்கை; தலை, புறம் என வரும்.

(67)