6. ஊகார ஈறு

இதுவும் அது

271.அக்கென் சாரியை பெறுதலும் உரித்தே
தக்கவழி அறிதல் வழக்கத் தான.

இஃது, இன்னும் அதற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) அக்கு என் சாரியை பெறுதலும் உரித்து-அதிகாரத்தான் நின்ற ஊ என்னும் பெயர் மேற் கூறிய னகரத்தோடு அக்கு என்னும் சாரியை பெற்று முடிதலும் உரித்து; வழக்கத்தான் தக்கவழி அறிதல்-வழக்கிடத்து அம்முடிபு தக்க இடம் அறிக.

`தக்க வழியறிதல்' என்றதனால், சாரியை பெற்றவழி நிலைமொழி னகரம் விலக்குண்ணாது நிற்றலும் முன்மாட்டேற்றால் விலக்குண்ட வல்லெழுத்துக் கெடாது நிற்றலும் கொள்க.

எ - டு : ஊனக்குறை ; செய்கை, தலை, புறம் என வரும்.

`வழக்கத்தான' என்றதனான், இவ்வீற்று உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கண் சென்றவழி இயைபுவல்லெழுத்து வீழ்க்க கொண்மூவின் குழாம் என வரும்.

(68)