இஃது, அவ்வீற்று உயர்திணைப் பெயர்க்கும் முன்எய்திய வல்லெழுத்தேயன்றி, சாரியையும் பெறுமென எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுதல் நுதலிற்று. (இ-ள்) ஆடூஉ மகடூஉ ஆ இரு பெயர்க்கும்-ஆடூஉ மகடூஉவாகிய அவ்விரண்டு பெயர்க்கும், இன் இடைவரினும் மானம் இல்லை-மேல் "குற்றெழுத் திம்பரும்" (உயிர் மயங்கியல்-65) என்னும் சூத்திரத்தின் "நிற்றல்" என்பதனால் வந்த வல்லெழுத் தேயன்றி இன்சாரியை இடை வரினும் குற்றம் இல்லை. எ - டு : ஆடூஉவின்கை; மகடூஉவின்கை; செவி, தலை, புறம் என வரும். `மான மில்லை' என்றதனான், இன் பெற்றவழி மேல் இலேசினானெய்திய வல்லெழுத்து வீழ்க்க. (69)
1. மானம்-அளவு, வரை, வரைதல்,நீக்குதல். `உருவுகொளல் வரையார்' (எழுத். 140) என்றும், அவ்வகை வரையார் (எழுத்.266) என்றும் ஆசிரியர் கூறுதல் காண்க. மானமில்லை, வரைவில்லை, விலக்கில்லை. (பாவாணர்.)
|