7. எகர ஒகர ஈறு

அல்வழியில் எகர ஒகர ஈறுகள்

273.எகர ஒகரம் பெயர்க்கீ றாகா
முன்னிலை மொழிய என்மனார் புலவர்
தேற்றமுஞ் சிறப்பும் அல்வழி யான.

இஃது எகரவீற்றிற்கும் ஒகரவீற்றிற்கும் ஈறாகாத நிலையில் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்) எகரம் ஒகரம் பெயர்க்கு ஈறு ஆகா-எகரமும் ஒகரமும் பெயர்ச்சொற்கு ஈறு ஆகா, முன்னிலை மொழிய என்மனார் புலவர் - வினைச்சொல்லுள் முன்னிலை மொழியிடத்தன வென்று சொல்லுவர் புலவர்; தேற்றமும் சிறப்பும் அல்வழியான -தேற்றப் பொருண்மையில் வரும் இடைச்சொல் எகார வீறும் சிறப்புப்பொருண்மையின் வரும் இடைச்சொல் ஒகார வீறும் அல்லாதவிடத்து.

எ - டு : ஏஎ எனவும், ஓஒ எனவும் வரும். இவை முன்னிலைவினை.

ஏஎ கொண்டான், ஓஒ கொண்டான் இவை இடைச்சொல்.

(70)