இஃது, முன் ஈறாம் என்னப்பட்ட எகர ஒகர ஈற்று இடைச்சொற்கும் அவ்வீற்று முன்னிலை வினைச்சொற்கும் முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்) தேற்ற எகரமும் சிறப்பின் ஒவ்வும்-தேற்றப் பொருண்மையில் வரும் எகரவீற்று இடைச்சொல்லும், சிறப்புப் பொருண்மையில் வரும் ஒகரவீற்று இடைச்சொல்லும், மேல்கூறு இயற்கை வல்லெழுத்து மிகா-மேலை முன்னிலை வினைச்சொற்குக் கூறப்படும் இயல்புடைய வல்லெழுத்து மிகாவாய் இயல்பாய் முடியும். "மேற் கூறியற்கை வல்லெழுத்து மிகா" என்றதனால் "வந்தது கொண்டு வராதது உணர்க" என்னும் தந்திரவுத்திவகையான் வல்லெழுத்து மிகுமென்பது கூறப்பட்டதாயிற்று. எ - டு : யானேஎ கொண்டேன், நீயேஎ கொண்டாய், அவனே எ கொண்டான் எனவும்; (ஓஒகொண்டேன், ஓஒ கொண்டாய்.) ஓஒகொண்டான் எனவும் வரும். இவை இடைச்சொல். ஏஎக்கொற்றா, ஓஒக்கொற்றா; சாத்தா, தேவா, பூதா என இவை முன்னிலைவினை. `இயற்கை' என்றதனான், அம் முன்னிலை வினைகளை அளபெடையாக நிறீஇக் கொள்க. (71)
|