8. ஏகார ஈறு

ஏகார இடைச் சொற்கள்

276.மாறுகொள்1 எச்சமும் வினாவும் எண்ணும்
கூறிய வல்லெழுத்து இயற்கை யாகும்.

இஃது, அவ்வீற்று இடைச்சொற்கு முடிபு கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) மாறுகொள் எச்சமும் வினாவும் எண்ணும்- மாறுபாடுகோடலையுடைய எச்சப்பொருண்மைக்கண் வரும் ஏகாரவீற்று இடைச்சொல்லும் வினாப் பொருண்மைக்கண் வரும் ஏகாரவீற்று இடைச்சொல்லும் எண்ணுப்பொருண்மைக்கண் வரும் ஏகாரவீற்று இடைச்சொல்லும், கூறிய வல்லெழுத்து இயற்கை ஆகும்- மேற்கூறிய வல்லெழுத்துப் பெறாது இயல்பாய் முடியும்.

எ - டு : யானே கொண்டேன்; சென்றேன், தந்தேன், போயினேன் எனவும்; நீயே கொண்டாய்; சென்றாய், தந்தாய், போயினாய் எனவும்; கொற்றனே, சாத்தனே, தேவனே, பூதனே எனவும் வரும்.

`கூறிய' என்றதனால், பிரிநிலைப் பொருண்மைக்கண்ணும் ஈற்றசைக்கண்ணும் வரும் ஏகாரங்களின் இயல்பு முடிபு கொள்க.

அவனே கொண்டான் என்பது பிரிநிலை, `கடலே பாடெழுந்தொலிக்கும்' என்பது ஈற்றசை.

(73)

1. (பாடம்) மாறுகோள். (நச்.)