9. ஐகார ஈறு

சுட்டுப்பெயர்

282.சுட்டுமுதல் இறுதி உருபியல் நிலையும்.

இஃது, இவ்வீற்றுட் சுட்டு முதற்பெயர்க்கு வல்லெழுத்தோடு வற்று வகுத்தல் நுதலிற்று.

(இ-ள்) சுட்டு முதல் இறுதி உருபு இயல் நிலையும் - சுட்டெழுத்தினை முதலாகவுடைய ஐகாரவீற்றுப்பெயர் உருபு புணர்ச்சியிற் கூறிய இயல்பின்கண்ணே நின்று ஐகாரம் கெடாதும் கெட்டும் வற்றுப்பெற்று முடியும். (உருபியல், சூத் - 5. பார்க்க.)

எ - டு : அவையற்றுக்கோடு, இவையற்றுக்கோடு, உவையற்றுக்கோடு; செவி, தலை, புறம் எனவும்; அவற்றுக்கோடு, இவற்றுக்கோடு, உவற்றுக்கோடு; செவி, தலை, புறம் எனவும் வரும்.

(79)