9. ஐகார ஈறு

`விசை' `ஞெமை' `நமை' என்னும் மரப்பெயர்கள்

283.விசைமரக் கிளவியும் ஞெமையும் நமையும்
அவைமுப் பெயருஞ் சேமர இயல.

இஃது, இவ்வீற்றுள் மரப்பெயர் சிலவற்றிற்கு வேறு முடிபு கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) விசை மரக்கிளவியும் ஞெமையும் நமையும் அவை முப்பெயரும் - விசை என்னும் மரத்தினை உணர நின்ற சொல்லும் ஞெமை என்னும் மரத்தினை உணர நின்ற சொல்லும் நமை என்னும் மரத்தினை உணர நின்ற சொல்லும் ஆகிய அம் மூன்று பெயரும், சேமர இயல-மேற்கூறிய வல்லெழுத்து மிகாது சே என்னும் மரத்தினது இயல்பினவாய் மெல்லெழுத்து மிக்கு முடியும்.

எ - டு : விசைங்கோடு, ஞெமைங்கோடு, நமைங்கோடு; செதிள் ,தோல், பூ என வரும்.

(80)