9. ஐகார ஈறு

`பனை' `அரை' `ஆவிரை' என்னும் மரப்பெயர்கள்

284.பனையும் அரையும் ஆவிரைக் கிளவியும்
நினையுங் காலை அம்மொடு சிவணும்
ஐயென் இறுதி யரைவரைந்து கெடுமே
மெய்அவண் ஒழிய என்மனார் புலவர்.

இதுவும் அது.

(இ-ள்) பனையும் அரையும் ஆவிரைக் கிளவியும்-பனை என்னும் சொல்லும் அரை என்னும் சொல்லும் ஆவிரை என்னும் சொல்லும், மேற் கூறிய வல்லெழுத்து மிகா, நினையுங் காலை அம்மொடு சிவணும் - ஆராயுங்காலத்து அம் என்னும் சாரியையொடு பொருந்தி முடியும், ஐ என் இறுதி அரை வரைந்து கெடும்-அவ்விடத்து ஐ என்னும் ஈறு அரை என்னும் சொல்லை நீக்கிக் கெடும், மெய்அவண் ஒழிய என்மனார் புலவர்-தன்னாலூரப்பட்ட மெய் அச் சொல்லிடத்தே ஒழியவென்று சொல்லுவர் புலவர்.

எ - டு : பனங்காய்; செதிள் ,தோல், பூ எனவும்; அசையுங்கோடு; செதிள் ,தோல், பூ எனவும்; ஆவிரங்கோடு; செதிள் ,தோல், பூ எனவும் வரும்.

`நினையுங்காலை' என்றதனால் பிறவும் தூதுணை, வழுதுணை தில்லை, ஓலை என வருவனவற்றிற்கும் அம்முக்கெடுத்து ஐகாரம் கெடுத்துத் தூதுணங்காய், வழுதுணங்காய், தில்லங்காய், ஓலம் போழ் என்று முடிக்க.

(81)