9. ஐகார ஈறு

வேட்கை முன் அவா

289.செய்யுள் மருங்கின் வேட்கை என்னும்
ஐயென் இறுதி அவாமுன் வரினே
மெய்யொடுங் கெடுதல் என்மனார் புலவர்
டகாரம் ணகார மாதல் வேண்டும்.

இஃது, இவ்வீற்றுள் ஒன்றற்கு அல்வழிக்கண் செய்யுள் முடிபு கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) செய்யுள் மருங்கின் வேட்கை என்னும் ஐ என் இறுதி - செய்யுளிடத்து அல்வழிக்கண் வேட்கை என்னும் ஐகார வீற்றுச்சொல், அவா முன்வரின் - அவா என்னும் சொல் தனக்கு முன்வரின், மெய்யொடும் கெடுதல் என்மனார் புலவர்-அவ்வைகாரம் தான் ஊர்ந்த மெய்யொடுங்கூடக் கெடுகவென்று சொல்லுவர் புலவர்; டகாரம் ணகாரம் ஆதல் வேண்டும். அவ்விடத்து நின்ற டகாரவொற்று ணகாரவொற்றாய்த் திரிந்து முடிதல் வேண்டும்.

எ - டு : "வேணவா1 நலிய வெய்ய வுயிரா" என வரும். இதனை உம்மைத் தொகையாகக் கொள்க. அவாவென்பது அவ்வேட்கையின் விகுதி.

இவ்வல்வழியை வேற்றுமை முடிபிற்கு முன் கூறாததனால் விச்சாவாதி என்றாற்போல வரும் உம்மைத் தொகை அல்வழி முடிபும், பாறங்கல் என இரு பெயரொட்டு அல்வழி முடிபும் கொள்க.

(86)

1. வேட்கையாவது பொருள்கள்மேல் தோன்றும் பற்றுள்ளம் எனவும், அவாவாவது அப்பொருள்களைப் பெறவேண்டும் என்று மேன்மேல் நிகழும் ஆசை எனவும், " பொருள்கூறி வேணவா" என்பதனை வேட்கையாலுண்டாகிய அவா என முன்றனுருபும் பயனும் தொக்க தொகையாகக் கொண்டார்.2 (நச்.)

2.இந்நூற்பாவின்படி வேட்கை + அவா = வேணவா என்று முடிக்காமல் வேண் + அவா = வேணவா என்றே முடிக்கவும் கூடும். வேள்-வேண், ஒ , நோ: பெள் - பெண். (பாவாணர்.)