நூன்மரபு

5. மயக்கம்

29.ய ழ ர என்னும் புள்ளி முன்னர்
முதலா கெழுத்து ஙகரமொடு தோன்றும்.

இதுவும் அது.

ய ழ ர என்னும் புள்ளி முன்னர்- யழர என்று சொல்லப்படுகின்ற புள்ளிகளின் முன்னர், முதல் ஆகு எழுத்து ஙகரமொடு தோன்றும்- மொழிக்கு முதல் ஆம் என்னப்பட்ட ஒன்பது மெய்யும்(முதலாக) ஙகரத்தோடு தோன்றி மயங்கும்.

எ - டு: வேய்கடிது, வேர்கடிது, வீழ்கடிது, சிறிது, தீது, பெரிது, ஞான்றது, நீண்டது, மாண்டது, யாது, வலிது எனவரும் வேய்ஙனம், வேர்ஙனம், வீழ்ஙனம் எனவும் ஒட்டுக. வேய்யாது என்புழி, உடனிலையாதலான் யகரம் ஒழித்து ஒட்டுக.

(29)