10. ஓகார ஈறு

ஓகார இடைச்சொல்

291.மாறுகொள் எச்சமும் வினாவும் ஐயமும்
கூறிய வல்லெழுத் தியற்கை யாகும்.

இஃது, இவ்வீற்று இடைச்சொல் முடிபு கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) மாறுகொள் எச்சமும் வினாவும் ஐயமும் - மாறுபாட்டினைக் கொண்ட எச்சப் பொருண்மையினையுடைய ஓகாரமும், வினாப்பொருண்மையையுடைய ஓகாரமும் ஐயப் பொருண்மையினையுடைய ஓகாரமும். கூறிய வல்லெழுத்து இயற்கை ஆகும் - முன் பெயர்க்குக் கூறிய வல்லெழுத்தன்றி இயல்பாய் முடியும்.

எ - டு : யானோ கொண்டேன் எனவும், நீயோ கொண்டாய் எனவும், பத்தோ பதினொன்றோ எனவும் வரும்.

`கூறிய' என்றதனால், பிரிநிலையும், தெரிநிலையும், எண்ணும் ஈற்றசையும் இயல்பாய் முடிதல் கொள்க. அவனோ கொண்டான் எனவும், நன்றோ தீதோவன்று எனவும், "குன்றுறழ்ந்த களிறென்கோ கொய்யுளைய மாவென்கோ" எனவும் யானோ தேறேன் எனவும் வரும்.

(88)