10. ஓகார ஈறு

`கோ' முன் `இல்'

294.இல்லொடு கிளப்பின் இயற்கை யாகும்.

இஃது, எய்தியது ஒருமருங்கு மறுத்தல் நுதலிற்று.

(இ-ள்) இல்லொடு கிளப்பின் இயற்கை ஆகும் - ஓகார வீற்றுக் கோ என்னும் மொழியினை இல் என்னும் வருமொழியொடு சொல்லின் ஓகாரம் மிகாது இயல்பாய் முடியும்.

எ - டு : கோயில் என வரும்.

நிலைமொழி ஒகரவெழுத்துப்பேறும் வரையாது கூறினவழி நான்கு கணத்துக் கண்ணும் செல்லுமென்பதனாற் பெற்றாம். கோ வென்றது உயர்திணைப் பெயரன்றோவெனின் கோவந்ததென அஃறிணையாய் முடிதலின் அஃறிணைப்பாற்பட்டது போலும்.1

(91)

1. அஃறிணைப்பாற் படுதலாவது சொல்லால் அஃறிணையாயும் பொருளால் உயர்திணையாயுமிருத்தல். (பாவாணர்.)