10. ஓகார ஈறு

சில ஈறுகட்குச்சாரியை

295.உருபியல் நிலையும் மொழியுமா ருளவே
ஆவயின் வல்லெழுத் தியற்கை யாகும்.

இஃது, அவ்வீற்றிற் சிலவற்றிற்கு வல்லெழுத்து விலக்கிச் சாரியை வகுத்தமையின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) உருபுஇயல் நிலையும் மொழியுமார் உள - அவ்வீற்றுட் சில உருபுபுணர்ச்சியது இயல்பிலே நின்று ஒன்சாரியை பெற்று முடியும் மொழிகளும் உள; ஆ வயின் வல்லெழுத்து இயற்யை ஆகும் - அவ்விடத்து வல்லெழுத்தின்றி இயல்பாய் முடியும்.

எ - டு : கோஒன்கை; செவி, தலை, புறம் என வரும்.

இதனானும் பெற்றாம், சாரியைப்பேறு வருமொழி வல்லெழுத்து விலக்காமை.

(92)