இஃது, ஒளகார ஈறு அல்வழிக்கண்ணும் வேற்றுமைக்கண்ணும் முடியுமாறு கூறுதல் நுதலிற்று. (இ-ள்) ஒளகார இறுதி பெயர்நிலைமுன்னர் அல்வழியானும் வேற்றுமைக்கண்ணும் வல்லெழுத்து மிகுதல் வரைநிலை இன்று - ஒளகாரவீற்றுப் பெயர்ச் சொல்முன்னர் வல்லெழுத்து முதல் மொழி வரின் அவை அல்வழிக்கண்ணும் வேற்றுமைக்கண்ணும் வல்லெழுத்து மிக்கு முடிதல் நீக்கும் நிலையின்றாம், அஇரு ஈற்றும் உகரம் வருதல் செவ்விது என்ப சிறந்திசினோர் - அவ்விருகூற்று முடிபின்கண்ணும் நிலைமொழிக்கண் உகரம் வந்து முடிதல் செவ்விதென்று சொல்லுவர் சிறந்தோர். எ - டு : கௌவுக்கடிது; சிறிது, தீது, பெரிது எனவும்; கௌவுக்கடுமை; சிறுமை, தீமை, பெருமை எனவும் வரும். `செவ்விது' என்றதனான், மென்கணத்துக்கண்ணும் இடைக்கணத்துக்கண்ணும் இருவழியும் உகரப்பேறு கொள்க. கௌவுஞான்றது, கௌவுஞாற்சி எனவும்; கௌவு வலிது, கௌவு வலிமை எனவும் வரும். `நிலை' என்றதனால், கௌவின் கடுமை என உருபிற்குச் சென்ற சாரியை. பொருட்கள் சென்றவழி, இயைபு வல்லெழுத்து வீழ்வு கொள்க. (93) ஏழாவது உயிர் மயங்கியல் முற்றிற்று.
|