இத் தலைச்சூத்திரம் என் நுதலிற்றோவெனின், ஞகாரவீறு வன்கணத்தோடு இருவழிக்கண்ணும் புணருமாறு கூறுதல் நுதலிற்று. (இ-ள்) ஞகாரை ஒற்றிய தொழிற்பெயர் முன்னர் - ஞகாரம் ஈற்றின்கண் ஒற்றாகநின்ற தொழிற்பெயரின் முன்னர், அல்லது கிளப்பினும் வேற்றுமைக்கண்ணும் - அல்வழிக் கண்ணும், வேற்றுமைக்கண்ணும், வல்லெழுத்து இயையின் அவ்வெழுத்துமிகும் - வல்லெழுத்து முதல்மொழி வருமொழியாயின் வல்லெழுத்து வருமொழிக்கண் மிக்கு முடியும், ஆவயின் ஆன உகரம் வருதல் - ஆண்டு நிலைமொழிக்கண் உகரம் வருக. எ - டு : உரிஞுக்கடிது; சிறிது, தீது, பெரிது எனவும்; உரிஞுக்கடுமை; சிறுமை, தீமை, பெருமை எனவும் வரும். (1)
|