இஃது, அவ்வீறு மென்கணத்தோடும் இடைக்கணத்து வகரத்தோடும் முடியுமாறு கூறுதல் நுதலிற்று. (இ-ள்) ஞநமவ இயையினும் உகரம் நிலையும்-அந்த ஞகரவீறு வன்கணமன்றி ஞநமவ முதன்மொழி வருமொழியாய் இயையினும் நிலைமொழிக்கண் உகரம் நிலைபெற்று முடியும். எ - டு : உரிஞுஞான்றது ; நீண்டது , மாண்டது எனவும் ; உரிஞுஞாற்சி ; நீட்சி , மாட்சி எனவும் ; உரிஞுவலிது , வலிமை எனவும் வரும். இடைக்கணத்து யகரத்தோடும் உயிரோடும் புணருமாறு தொகை மரபினுள் "உகரமொடு புணரும் புள்ளியிறுதி" (சூத் - 21) என்பதனுட் கூறப்பட்டது. (2)
|