இஃது, நிறுத்த முறையானே உடனிலை மயக்கம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. மெய்ந்நிலை சுட்டின் - பொருள் நிலைமைக் கருத்தின்கண், எல்லா எழுத்தும் தம்முன் தாம் வரும்- எல்லா மெய்யெழுத்தும் தம்முன்னே தாம் வந்து மயங்கும், ர ழ அலங்கடை -ரகார ழகாரங்கள் அல்லாத இடத்து. எ - டு: காக்கை, எங்ஙனம், பச்சை, மஞ்ஞை, பட்டை, மண்ணை, தத்தை, வெந்நோய், அப்பை, அம்மி, வெய்யர், எல்லி, எவ்வி,கொள்ளி,கொற்றி, கன்னி என வரும். ` மெய்ந்நிலை சுட்டின்' என்றதனால், `தம்முன் தாம் வரும்' என்றது மெய்ம்முன்னர் மெய்யென்னும் மாத்திரையன்றி உடனிலைமெய் மேலதாம் என்பது கொள்க. `எல்லாம்' என்றது மேல் ய ழ ர என்ற அதிகாரம் மாற்றி வந்து நின்றது. (30)
|