இஃது, அவ்வீற்று வேற்றுமைக்கண் நிலைமொழி முடிபு வேறாய் முடியுமாறு கூறுதல் நுதலிற்று. (இ-ள்) வேற்றுமைக்கு உ கெட அகரம் நிலையும் - அந்நகரவீறு வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண் எய்திய நிலைமொழி உகரம் கெட அகரம் நிலைபெற்று முடியும் . எ - டு :1பொருநக்கடுமை , சிறுமை , தீமை , பெருமை , எனவும் ; பொருந ஞாற்சி , நீட்சி , மாட்சி எனவும் ; பொருநவலிமை எனவும் வரும். அகரம் நிலையும் என்னாது `உகரங்கெட' என்றதனான் , அவ்விரு வீற்றின் உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கண் சென்ற வழி இயைபு வல்லெழுத்து வீழ்வும் சிறுபான்மை உகரப்பேறும் கொள்க . பொருநின்குறை , உரிஞின்குறை எனவும் ; "உயவல் யானை வெரிநுச் சென்றன்ன" (அகம் - 65) எனவும் வரும். (4)
1.பொருந் என்பது ஒருசாதிப் பெயரும் , பொருநுதல் என்னும் வினைப்பெயருமாம் .(நச் .).
|