1. மெல்லொற்று ஈறுகள்

`வெரிந்' என்னும் சொல்

301.வெரிந்என் இறுதி முழுதுங் கெடுவழி
வருமிடன் உடைத்தே மெல்லெழுத் தியற்கை.

இஃது, அந்நகரவீற்று ஒருமொழிக்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் நுதலிற்று.

(இ-ள்) வெரிந்1என் இறுதி முழுதும் கெடுவழி - வெரிந் என்று சொல்லப்பட்ட நகரவீற்று மொழி தன் ஈற்று நகரம் முன்பெற்ற அகரத்தோடு எஞ்சாமற் கெட்டவிடத்து , மெல்லெழுத்து இயற்கை வரும் இடன் உடைத்து - மெல்லெழுத்துப் பெறும் இயல்பு வந்துமுடியும் இடனுடைத்து .

எ - டு : வெரிங்குறை ; செய்கை , தலை , புறம் என வரும்.

(5)

1."வெயில் வெரி நிறுத்த .... இட்டெழுதுப" (அகம் - 37) என்பது நனண என்னும் மூன்று இனவெழுத்துக்களுள் முதலதே முந்தினது என்பதை உணர்த்தும் . (பாவாணர்)