1. மெல்லொற்று ஈறுகள்

`ஆண்' `பெண்' என்னும் சொற்கள்

304.ஆணும் பெண்ணும் அஃறிணை இயற்கை.

இஃது, அவ்வீற்று விரவுப்பெயருட் சிலவற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் நுதலிற்று.

(இ-ள்) ஆணும்பெண்ணும் அஃறிணை இயற்கை - ஆண் என்னும் பெயரும் பெண் என்னும் பெயரும் மேல் தொகை "மரபினுள் மொழிமுத லாகும்" ( சூத்திர்ம - 5) என்பதன்கண் அஃறிணைப் பெயர் முடிந்த இயல்புபோலத் தாம் வேற்றுமைக் கண் இயல்பாய் முடியும்.

எ - டு : ஆண்கை , பெண்கை , செவி , தலை , புறம் என வரும் .

மற்றிது தொகை மரபினுள் "அஃறிணை விரவுப்பெயர்" (சூத்திரம் - 13) என்பதனுள் இயல்பாய் முடிந்ததன்றோ வெனின் , இவை ஆண்டு முடிந்தனபோலத் தத்தம் மரபின் வினையாற் பாலறியப் பவனவன்றி , இருதிணைக்கண்ணும் அஃறிணையாய் முடிதலின் அவ்வஃறிணைப் பெயரது இயல்போடு மாட்டெறிந்து முடித்தான் எனக் கொள்க . இவ்வாறாதலின் , ஆண்கடிது பெண்கடிது என்னும் அல்வழியும் `மொழி முதலாகும்' (தொகைமரபு - 5) என்பதனுட் கொள்ளப்படும்.

(8)