1. மெல்லொற்று ஈறுகள்

`விண்' என்னும் சொல்

306.விண்ணென வரூஉங் காயப் பெயர்வயின்
உண்மையும் உரித்தே அத்தென் சாரியை
செய்யுள் மருங்கின் தொழில்வரு காலை.

இஃது ,செய்யுளுள் திரிபு விலக்கிச் சாரியை வகுத்தல் நுதலிற்று.

(இ-ள்) விண் என வரும் காயப் பெயர்வயின் - விண் என்று சொல்லவருகின்ற ஆகாயத்தை உணரநின்ற பெயர்க்கண் , அத்து என் சாரியை எண்மையும் உரித்து - அத்து என்னும் சாரியை உண்டாதலும் உரித்து இல்லையாதலும் உரித்து , செய்யுள் மருங்கின் தொழில் வரு காலை - செய்யுளிடத்து வினை வரும் காலத்து.

எ - டு : விண்ணத்துக் கொட்கும் எனவும் , "விண்குத்து நீள் வரை" (நாலடி - 226) எனவும் வரும்.

(10)