இஃது, இவ்வீற்றுட் சிலவற்றிற்குத் திரிபு விலக்கி இயல்பு கூறுதல் நுதலிற்று. (இ-ள்) கிளைப்பெயரெல்லாம் கொள திரிபு இல - ணகர வீற்றுள் ஓர் இனத்தை உணர நின்ற பெயரெல்லாம் திரிபுடைய வென்று கருதும்படியாகத் திரிதலுடையவன்றி இயல்பாய் முடியும். எ - டு : உமண்குடி; சேரி, தோட்டம், பாடி என வரும். `எல்லாம்' என்றதனான் இவ்வீறு சாரியை பெற்று முடிவனவும் இயல்பாய் முடிவனவும் கொள்க, மண்ணக்கடி, எண்ண நோலை1 எனவும்; பரண்கால், கவண்கால் எனவும் வரும். `கொள' என்றதனான், இவ்வீறு ஏழாம் வேற்றுமைப் பொருண்மை உணரநின்ற இடைச்சொல் திரிந்து முடிவனகொள்க. அங்ஙட்கொண்டான், இங்கட்கொண்டான், உங்கட்கொண்டான் எனவும்; ஆங்கட்கொண்டான், ஈங்கட்கொண்டான், ஊங்கட்கொண்டான் எனவும், அவட்கொண்டான், இவட்கொண்டான், உவட்கொண்டான் எனவும் ஒட்டுக. (12)
1.எண்ண நோலை - எள்ளுருண்டை, நோலை என்பதே எள்ளுருண்டையைக் குறிக்கும் ஆதலால், எண்ணநோலை என்பது நாண்கயிறு என்றாற்போல ஓரளவு மிகைபடக் கூறலாம். (பாவாணர்)
|