இஃது, மகரவீற்றிற்கு மேற்கூறிய ணகரவீற்று வேற்றுமை முடிபோடு இயைய வேற்றுமை முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்) மகர இறுதி வேற்றுமையாயின் - மகரவீற்றுப் பெயர்ச்சொல் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண்ணாயின். துவரக் கெட்டு வல்லெழுத்து மிகும் - அம்மகரம் முற்றக்கெட்டு வருமொழி வல்லெழுத்து மிக்கு முடியும். எ - டு : மரக்கோடு, செதிள், தோல், பூ என வரும். `துவர' என்றதனான், இயல்புகணத்துக்கண்ணும் உயர்திணைப் பெயர்க்கண்ணும் விரவுப்பெயர்க்கண்ணும் மகரக்கேடு கொள்க. எ - டு : மரஞாண், நூல், மணி, யாழ், வட்டு, அடை, ஆடை எனவும்; நங்கை, எங்கை, செவி, தலை, புறம் எனவும்; நுங்கை, தங்கை எனவும் வரும். (15)
|