1. மெல்லொற்று ஈறுகள்

அல்வழியில் மகர ஈறு

315.அல்வழி யெல்லாம் மெல்லெழுத் தாகும்.

இஃது, அவ்வீற்று அல்வழி முடிபு கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) அல்வழி எல்லாம் மெல்லெழுத்து ஆகும் - மகரவீறு அல்வழிக்கணெல்லாம் மெல்லெழுத்தாய்த் திரிந்து முடியும்.

எ - டு : மரங்குறிது;1 சிறிது, தீது, பெரிது என வரும்.

`எல்லாம்' என்றதனான், இவ்வீற்று அல்வழி முடிபில் முடியாதனவெல்லாம் கொள்க. மரஞான்றது; நீண்டது மாண்டது எனவும்; வட்டத்தழை, வட்டப்பலகை எனவும்; கலக்கொள் கலநெல் எனவும்; நீளக்கண், பவளவாய்; எனவும் நிலநீர் எனவும்; கொல்லுங்கொற்றன், பறக்குநாரை எனவும் வரும்.

(19)

1. ஆணைகூறல் - இவ்வாசிரியன் கருத்து இதுவெனக்கொள்ள வைத்தல். மகரம் பகரத்திற்கு இன மெல்லெழுத்தாதலின் அதன் முன் திரியாது என்பது கருத்து. (பாவாணர்.)