இஃது, இவ்வீற்றுள் மரூஉ முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்) அகம் என் கிளவிக்கு கைமுன்வரின் - அகம் என்னும் சொல்லிற்குக் கை என்னும் சொல் முன்வரின், முதல் நிலை ஒழிய முன்னவை கெடுதலும் - முன் `மகரவிறுதி' (சூத்திரம்-15) என்றதனான் மகரம் கெட்டுநின்ற நிலைமொழி முதல் நின்ற அகரம் ஒழிய அதன் முன்நின்ற அகரமும் அகரத்தாற் பற்றப்பட்ட ககர மெய்யும் கெட்டு முடிதலும் அவைகெடாது நின்று முடிதலும், வரைநிலை இன்று ஆசிரியர்க்கு-நீக்கும் நிலைமையின்று ஆசிரியர்க்கு; ஆ வயின் ஆன மெல்லெழுத்து மிகுதல் - அவ்விரண்டிடத்தும் மெல்லெழுத்து மிக்குமுடிக. எ - டு : அங்கை, அகங்கை என வரும். (20)
|