1. மெல்லொற்று ஈறுகள்

`இலம்' முன் 'படு'

317.இலமென் கிளவிக்குப் படுவரு காலை
நிலையலும் உரித்தே செய்யு ளான.

இஃது, இவ்வீற்று உரிச்சொல்லுள் ஒன்றற்குச் செய்யுள் முடிபு கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) இலம் என் கிளவிக்கு படு வருகாலை - இலம் என்னும் சொல்லிற்குப் படு என்னும் சொல் வருமொழியாய் வருங்காலத்து, நிலையலும் உரித்து செய்யுளான - முன் 'மகரவிறுதி' (சூத்திரம்-15) என்பதனாற் கெட்ட ஈறு கெடாது நின்று முடிதலும் உரித்துச் செய்யுட்கண்.

எ - டு :1"இலம்படு புலவரேற்றகை நிறைய" என வரும்.

உரிச்சொல்லாகலான் உருபு விரியாதெனினும் இலத்தாற் பற்றப்படும் புலவரென்னும் பொருள் உணர நிற்றலின் வேற்றுமை முடிபாயிற்று. உம்மை மகரவீறு என்னும் சாதி யொருமை பற்றி வந்த எதிர் மறை.

(21)

1.இலம்படு புலவர் ஏற்றகை நிறைய (மலைபடு - 576) என்பதற்கு "இலத்தாற் பற்றப்பட்ட புலவர் என வேற்றுமை என்றாரால் உரையாசிரியர் எனின், பற்றப்பட்ட புலவர் என்பது பெயரெச்சமாதலின் பற்றவென்னும் தொழில் தோற்றுவிக்கின்ற முதனிலைச் சொல்லைச் சூத்திரத்து ஆசிரியர் எடுத்தோதிற்றிலர் ஆகலானும், படு என்பது தானும் புலவரென்னும் பெயரோடு முடியுங்கால் இரண்டுகாலமும் காட்டும் ஈறுகள் தொக்க முதனிலைச் சொல்லாய் நிற்றலின் அதனை எடுத்தோதினார் ஆதலானும், ஆசிரியர்க்கு அங்ஙனம் கூறுதல் கருத்தன்மை உணர்கவென்பதும் நெற்பாடு பெரிது என்பதில் பாடு உண்டாதற் பொருளுணர்த்தல் நின்றாற்போல இதற்கு இல்லாமை உண்டாகின்ற புலவர் எனப் பொருள் கூறுக".(நச்.)