1. மெல்லொற்று ஈறுகள்

ஆயிரம் என்னும் எண்ணுப்பெயர்

318.அத்தொடு சிவணும் ஆயிரத் திறுதி
ஒத்த எண்ணு முன்வரு காலை.

இஃது, இவ்வீற்று எண்ணுப்பெயருள் ஒன்றற்குத் தொகை மரபினுள் எய்திய ஏ என் சாரியை விலக்கி அத்து வகுத்தல் நுதலிற்று.

(இ-ள்) ஆயிரத்து இறுதி - ஆயிரம் என்னும் எண்ணுப் பெயரின் மகரமெய், ஒத்த எண்ணு முன் வருகாலை - தனக்கு அகப்படுமொழியாய்ப் பொருந்தின எண்ணுப்பெயர் தன்முன் வருங்காலத்து, அத்தொடு சிவணும் - தொகைமரபிற் கூறிய ஏ என் சாரியை ஒழித்து அத்துச்சாரியை பொருந்தி முடியும்.

எ - டு :ஆயிரத்தொன்று, ஆயிரத்திரண்டு; மூன்று, நான்கு என ஒட்டுக.

நிலைமொழி முற்கூறாது சாரியை முற்கூறியவதனான,. இதன் முன்னர்க் குறை கூறு முதல் என்பன வந்தவழியும் இம்முடிபு கொள்க. ஆயிரத்துக் குறை, கூறு, முதல் என ஒட்டுக.

(22)